அதிபரின் செய்தி

Principal

திருமதி. இளவேந்தி நிர்மலராஜ்


கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயம் செயற்திறனுடைய பயனுறுதிமிக்க செயற்பாட்டை வளர்க்கின்ற பாடசாலையாக கிளிநொச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரபல்யமான பாடசாலையாக திகழும் கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றுவதில் நான் பெருமையடைகின்றேன். இப்பாடசாலையானது இரணைமடுக்குள கட்டுமானப் பணிகளுக்காக வந்த குடும்பத்தவர்களது பிள்ளைகளின் கல்வித் தேவையை நிறைவேற்றுவதற்காக சேர். பொன். இராமநாதன் அவர்களினால் 1927 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இப்பாடசாலை துரிதமான கதியில் முன்னேற்றம் அடைந்து மாவட்டத்தின் முதன்நிலைப் பாடசாலையாக எப்போதும் மிளிர்ந்து வருகின்றது. இப்பாடசாலையின் கட்டமைப்புக்கள் பல கட்டங்களாக மாற்றமடையும் போக்குடையதாக உள்ளதுடன் இப்பாடசாலையானது நிர்வாக ரீதியான பாடசாலையாக காணப்படுகின்றது. அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் காரணமாகவும் பாடசாலையின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள்,  நலன்விரும்பிகள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் போன்றோரின் மிகக்கனதியான பங்களிப்புக்களினால் இப்பாடசாலையானது எப்போதும் கல்வி மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகளில் முன்னிலை வகித்து வருகின்றது.

இப்பாடசாலையின் பெறுபேற்றுச் செயற்றிறன் அதிகரித்துச் செல்வதுடன் பாடசாலைக் கலாச்சாரமானது மாணவர்களை ஒழுக்கமுள்ளவராக உருவாக்குவதில் பெரும்பங்காற்றி வருகின்றது. இவற்றுக்கு சான்றாக எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் இச்சமுதாயத்தில் உயர்பதவிகளிலும் நன்நடத்தை உடையவர்களாகவும் பாடசாலை மீது எப்போதும் அதிசிரத்தையுடையவர்களாகவும் காணப்படுவதனைக் குறிப்பிடலாம்.

இப்பாடசாலையானது கல்வி மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகளில் மேலும் விருத்தியடைய பல பௌதீக வளங்கள், கற்பித்தல்சார் உபகரணங்கள் இணைப்பாட செயற்பாட்டு உபகரணங்கள் போன்றன தேவையாக உள்ளன. இவற்றை பெற்றுக்கொள்வதற்கு எமது பாடசாலைச் சமூகம் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் பாடசாலையின் இலக்கு நோக்கி எமது செயற்பாடுகளை மிகவும் சிறப்பான முறையில் முன்னெடுக்கவுள்ளோம் என்பதனையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இளவேந்தி நிர்மலராஜ்
அதிபர்,
கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயம்.