பாடசாலை பற்றி

School Overview

1927 ஆம் ஆண்டு சேர். பொன். இராமநாதன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலை கிளிநொச்சி மாவட்டத்திலும் தேசிய மட்டத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்யும் தொலைநோக்கு பார்வையுள்ள சிறந்த தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் கல்விமான்களையும்  உருவாக்கும் பெருமைமிகு பாரம்பரியத்தை உடையதாகும். இலங்கைத் தீவின் இதயப்பகுதியில் அமைந்துள்ள எமது பாடசாலை, கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு தலைசிறந்த கலவன் பாடசாலையாகவும், வன்னிப் பெருநிலப்பரப்பின் மிகப்பெரிய பாடசாலைகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. 


கடந்த காலங்களில், பாடசாலை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி பெற்று, புதிய கட்டமைப்புக்களை சேர்த்து, கல்வித் தரத்தையும் விரிவுபடுத்தியுள்ளது. தொடக்க காலத்தில் ஒரு வகுப்பறையுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, தற்போது நவீன வகுப்பறைகள் அடங்கலாக 24 வகுப்பறைகள், ஒரு திறந்த வெளி அரங்கம் மற்றும் ஒரு மண்டபம் ஆகிய நவீன வசதிகளை கொண்டுள்ளது.


1AB தர பாடசாலையாக எமது பாடசாலை, தரம் 1 முதல் தரம் 13 வரை விரிவான கல்வியை வழங்கி, பல்வேறு மாணவர்களின் ஆர்வங்கள் மற்றும் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்றது. க.பொ.த உயர்தரத்தில் உயிரியல், கணிதம், கலை மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் சிறப்புப் பாடங்களை வழங்கி, மாணவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்குவதற்கான அறிவு மற்றும் திறன்களை வழங்குகிறோம். 2013 ஆம் ஆண்டில் உயர்தர கணிதம் மற்றும் உயிரியல் பிரிவுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்தப் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துடன், பல மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழையும் வாய்ப்பினையும் உருவாக்கியுள்ளது.


இன்று வரை எமது பாடசாலை பல சவால்களை எதிர்கொண்டுள்ளது, அதில், உள்நாட்டுப் போரின் பயங்கர விளைவுகளும் அடங்கும். இக்கட்டான சூழல்களிலும் பாடசாலைக் குடும்பம், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் நம்பிக்கை தளராது மன உறுதியுடன் செயற்பட்டுள்ளனர். பல்வேறு இடர்களை தாண்டி பாடசாலை தொடர்ந்து தரமான கல்வியை வழங்கி வருகிறது.


இன்று, கிளிநொச்சி மகா வித்தியாலயம் 2300க்கும் மேற்பட்ட மாணவர்களையும், 107 திறமையான ஆசிரியர்களையும் ஒருங்கிணைந்து சிறப்பான கல்வியை வழங்கி வருகிறது. தேசிய பரீட்சைகளான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர (O/L) மற்றும் க.பொ.த உயர்தர (A/L) பரீட்சைகளில் எமது மாணவர்களின் சாதனைகள் சிறப்பான இடத்தைப்பெற்றுள்ளன. கல்வியில் முன்னேற்றம் மட்டுமின்றி, இணைப்பாடவிதான செயல்பாடுகளிலும் சிறந்து விளங்குவதன் மூலம் மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்குகின்றது.


மாணவர்-ஆசிரியர் வளங்களை சமூக வளங்களுடன் ஒருங்கிணைத்து, உலகின் மாறும் தேவைகளுக்கு ஏற்ப நவீன தொழில்நுட்ப திறன் மற்றும் மனித விழுமியங்களைப் பேணும் குடிமக்களை உருவாக்க எமது பாடசாலை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இறைவனின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலை தொடர்ந்து கிளிநொச்சி நகரின் அறிவாலயமாக மிளிர்வதோடு வளமான எதிர்காலத்தை நோக்கி நிதானமாக முன்னேறி வருகின்றது.
 

எங்கள் வரலாற்றை மேலும் அறிய