கிளிநொச்சியின் கல்வி வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்ற பாடசாலை எனும் பெருமை கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு உண்டு. நீர் வளமும் நில வளமும் மிக்க கிளிநொச்சி நகரின் முதலாவது பாடசாலையாக சேர். பொன். இராமநாதன் அவர்களால் இரணைமடுக்குள கட்டுமானப்பணிகளுக்காக வந்த குடும்பத்தவர்களது பிள்ளைகளின் கல்வித் தேவையை நிறைவேற்றுவதற்காக 29.07.1927 அன்று வில்சன் வீதியில் காக்கா கடைச்சந்திக்கு அருகாமையில் ஒரு ஏக்கர் அளவான காணியில் இப்பாடசாலை யா/கிளிநொச்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
இப்பாடசாலையின் முதலாவது அதிபாராக திரு. ஜே. என். சரவணமுத்து கடமையாற்றினார். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் கல்வி வரலாற்றில் 1938 ஆம் ஆண்டு முக்கியமானதாகும். அந்த ஆண்டில் ஜே.எஸ்.சி வகுப்புகுகள் தொடங்கப்பட்டன. ஆரம்பத்தில் ஏறத்தாழ நாற்பது மாணவர்களை கொண்டு இயங்கிய இப்பாடசாலை, 1954 ஆம் ஆண்டு திரு. ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் 1960 களில் கிளிநொச்சி நகர்ப்பகுதியில் மக்கள் குடியமர்த்தல் என்பன இப்பாடசாலையின் மாணவர் தொகையினை 1969 ஆம் ஆண்டு அளவில் ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்தது.
இக்காலப்பகுதியில் இப்பாடசாலை படிப்படியாக வகுப்பறைகள், ஆசிரியர் விடுதி என்பவற்றைப் பெற்று வளர்ச்சியடைந்தது. பாடசாலையின் பௌதீக வள முன்னேற்றத்தில் அதிபர் திரு. கே. வைத்தியநாதன் அவர்களின் பங்களிப்பு இங்கு குறிப்பிடத்தக்கது. அவரது தலைமையில் பாடசாலையின் வடக்கு பகுதியில் உள்ள மண்டபம் (வகுப்பறை தொகுதி) நிர்மாணிக்கப்பட்டது. இதற்குத் தேவையான மேலதிக நிதியை கிளிநொச்சி நகரின் வர்த்தகர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரிடமிருந்து சேகரித்து, இந்த நிர்மாணப் பணியை சிறப்பாக நிறைவேற்றினார். மேலும், பாடசாலை நேரத்தைத் தவிர்ந்த நேரங்களில், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பிள்ளையாரை போல் தோற்றமளித்த மரவேரை தோளில் சுமந்து கிளிநொச்சி நகர வீதிகளில் இக்கட்டுமானத்திற்கான நிதிச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மண்டபத்தில் சரஸ்வதி பூசை, கலைவிழா மற்றும் ஒன்றுகூடல்கள் நடைபெறுவது வழக்கம்.
எமது பாடசாலை 1963 ஆம் ஆண்டு யா/கிளிநொச்சி மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டதுடன் முதன் முதலாக கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை நிலையகமாகவும் செயற்பட்டது. இங்கு 1964 ஆம் ஆண்டு முதல் ஜீ.சி.ஈ சாதாரணதர வகுப்புக்கள் நடைபெற்று வந்தன. மேலும் க.பொ.த உயர்தர கலைப் பிரிவு வகுப்புக்கள் ஆரம்பிற்பதற்கான அனுமதியானது 1968 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு 1973 ஆம் ஆண்டில் உயர்தர கலைப் பிரிவிற்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சியின் சனத்தொகையானது வளர்ச்சியடையத் தொடங்கிய நிலையில், மாணவர்களின் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப சிறந்த கற்றல் சூழ்நிலையை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், பாடசாலையை விரிவு படுத்துவதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு, தற்போதுள்ள இடத்தில் பாடசாலையை சூழ பிற அலுவலகங்கள் காணப்பட்டதால் 50 ஏக்கர் காணி ஒன்று அதிபர் திரு. மா. சண்முகநாதன் மற்றும் பாடசாலை சமூகத்தின் முயற்சியினால் இரத்தினபுரத்தில் (தற்போதைய ஆனந்தபுரம்) 1974 ஆம் ஆண்டு பெறப்பட்டது. 1977 ஆம் ஆண்டு பாடசாலையின் இடைநிலை மற்றும் உயர்நிலை வகுப்புக்கள் (தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரை ) புதிய இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதேவேளை இப்பாடசாலை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவாக (தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை) யா/கிளிநொச்சி கனிட்ட வித்தியாலயம் என்ற பெயருடன் இயங்கத்தொடங்கியது.
அதிபர் திரு. ஏ. கே. இராஜேந்திரம் அவர்களின் அயராத உழைப்பால் கிளிநொச்சி கனிட்ட மகா வித்தியாலயத்தில் மீண்டும் தரம் 6 இடைநிலை வகுப்புக்கள் 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1985 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி கனிட்ட மகா வித்தியாலயத்தின் முதலாவது க.பொ.த சாதாரணதர அணி 1985 ஆம் ஆண்டு அணியாகும். 1984 ஆம் ஆண்டு கிளிநொச்சி தனியான மாவட்டமாக உருவாக்கப்ட்டதை தொடர்ந்து புதிய மாவட்ட அடையாளத்தை பிரதிபலிக்குமுகமாக எமது பாடசாலையின் பெயர் யா/கிளிநொச்சி கனிட்ட மகா வித்தியாலயம் என்பதிலிருந்து கிளி/கிளிநொச்சி கனிட்ட மகா வித்தியாலயம் என மாற்றம் பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலப்பகுதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தில் முன்னிலை வகித்த எமது பாடசாலை க.பொ.த சாதாரணதரப் பரீட்சையிலும் துரித கதியில் மாவட்டத்தின் முதன்நிலையினை தனதாக்கிக்கொண்டது.
கல்வியில் முன்னிலை வகித்த எமது பாடசாலையானது அதிபர் திரு. ஜே. எம். பி. ஜெயராஜா அவர்களின் முயற்சியால் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் குறிப்பாக விளையாட்டுத்துறையில் முன்னிலை பெற்றதுடன் தொடர்ச்சியாக சிறப்பான பெறுபேறுகளைக் கல்வி இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பெற்று 1993 ஆம் ஆண்டு உயர்தர கலை, வர்த்தக வகுப்புக்களை ஆரம்பிக்கும் தகுதியை பெற்றுக்கொண்டதுடன் 1994 ஆம் ஆண்டு கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயமாகவும் தரமுயர்த்தப்பட்டது. 1994 ஆம் ஆண்டு கலைப்பிரிவும் 1995 ஆம் ஆண்டு வர்த்தகப்பிரிவும் இங்கு ஆரம்பிக்கப்பட்டது.
அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை எதிர்கொண்டு நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையில் பல தடவைகள் இடம்பெயர்ந்து வளங்கள் பலவற்றை இழந்தபோதும் நம்பிக்கை தளராது மீண்டும் தன்னை நிலைப்படுத்தி நிமிர்ந்தமை பாடசாலையின் சிறப்பிற்கு சான்றாகும். 2007 ஆம் ஆண்டிற்கு பின்னரான இறுதிப்போரில் பெரும்பாலான பௌதீக வளங்கள் மற்றும் ஆவணங்களில் பேரழிவைச் சந்தித்த எமது பாடசாலை 19.01.2010 அன்று தனது இடத்தில் மீளக்குடியேறியது.
இதனைத் தொடர்ந்து எமது பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் கூட்டு உழைப்பால் தனது கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தனக்கே உரித்தான மாவட்டத்தின் முதன்நிலையினை எப்போதும் தனதாக்கிக் கொண்டது.
எமது பாடசாலை 03.05.2013 அன்று 1AB பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டு கணித விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்பிரவுகளிலும் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்று அதிகளவான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிவருகின்றமை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இது மட்டுமல்லாது ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் மாவட்டத்தில் அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எமது பாடசாலை மாவட்ட மட்டத்திலன்றி மாகாண, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலும் தனது செயற்பாடுகளில் மிளிர்வதனைக் காணலாம்.
2021 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் 11 மாணவர்கள் பொறியியல் துறைக்கும் 6 மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் மொத்தம் 73 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றனர். க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 2021 இல் 94% சித்தியையும் 19 மாணவர்கள் 9A பெறுபேற்றினையும் 12 மாணவர்கள் 8AB பெறுபேற்றினையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
2021 இல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 96% சித்தியையும் 52 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த(சா/த), க.பொ.த(உ/த) பரீட்சைகளில் தேசிய நிலையில் எமது மாணவர்களின் சாதனைகள் சிறப்பான இடத்தைப்பெற்றுள்ளன. இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர்களின் அடைவுகள் உயர்வாக உள்ளன. மேலும் இச்செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக்குவதற்கான பொறிமுறைகளை இனங்கண்டு அவை தொடர்பான பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2024 ஆம் ஆண்டு பாடசாலைத் தரவுகளின் அடிப்படையில் ஆரம்பப்பிரிவில் 724 மாணவர்களையும், இடைநிலைப்பிரிவில் 1153 மாணவர்களையும் 347 உயர்தரமாணவர்களுமாக மொத்தம் 2173 மாணவர்களையும் 107 ஆசிரியர்களையும் கொண்டதாக உள்ளது.
எமது பாடசாலையின் கல்வியியல் துறை முன்னேற்றங்கள் மற்றும் இணைப்பாடவிதான அடைவுகளின் மிளிர்வு மாவட்டத்தின் பெறுபேற்றை உயர்த்தும் ஒரு குறிகாட்டியாக உள்ளது என்பதில் எமக்கும் பெருமை உண்டு. நாளைய நவீன தொழிலுலகிற்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துவதற்கும் மனித விழுமியங்களைப் பேணும் மாணவர்களாக அவர்களைத் தகவமைப்பதற்கும் களமாக, கிளிநொச்சி நகரின் அறிவாலயமாக மிளிரும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்து உழைத்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னைநாள் அதிபர்கள், முன்னைநாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் போற்றுதற்குரியவர்கள். பாடசாலையின் செயற்பாடுகள் ஆக்கபூர்வமாக முன்னோக்கி செல்வதற்கு அனைவரது கூட்டு முயற்சியே காரணமாகும்.