2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த எமது வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நேற்று (01.04.2026) எமது பாடசாலைக்கு நேரடியாக வருகை தந்த கௌரவ ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோர் எமது சாதனை மாணவர்கள் திருக்குமரன், கிருஷோந்த், மதுமினி ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் 
தமது கடின உழைப்பாலும் சுயமுயற்சியாலும் மாபெரும் வெற்றியீட்டிய மாணவர்களைப் பாராட்டிப் பேசிய ஆளுநர், 'கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மாணவரொருவர் தேசிய நிலையில் முதலிடம் பெற்றுள்ளமை, மாகாணத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது' எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், 'இந்தச் சாதனை மாணவர்கள் ஏனைய மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குவதோடு, எதிர்காலத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழ வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் ஆளுநர் வெகுவாகப் பாராட்டினார்.